ஸ்ரீரங்கத்தில் தெப்ப உற்சவ விழா ரெங்கநாதர் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி 3 முறை வலம் வந்தார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவ விழா நடந்தது. இதில் ரெங்கநாதர் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி 3 முறை தெப்பத்தை வலம் வந்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவ விழாக்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடக்கும் தெப்ப உற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் ரெங்கநாதர் தாமரை தெப்பக்குளத்தில் எழுந்தருளும் காட்சி பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாகும். இந்த ஆண்டு திருப்பள்ளியோடத் திருவிழா என்று அழைக்கப்படும் தெப்ப உற்சவ விழா கடந்த 10-ந் தேதி(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

தினமும் ரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியான வெள்ளி கருட சேவை கடந்த 13-ந் தேதி நடந்தது. இதை காண்போருக்கு காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கருட சேவையை தரிசித்தனர். விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ரெங்கநாதர் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது.

தெப்ப உற்சவம்

நேற்று முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவ விழா நடந்தது. ரெங்கநாதர் மாலை 3.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உபநாச்சியார்களுடன் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 4.30 மணிக்கு தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். பின்னர் இரவு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தாமரை தெப்பக்குளத்தை அடைந்தார். இரவு 7.45 மணிக்கு ரெங்கநாதர் உபநாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.

தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து மைய மண்டபத்தை அடைந்தார். அங்கு ரெங்கநாதருக்கு விசேஷ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து மைய மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார். தெப்ப உற்சவ விழாவை ஒட்டி தெப்பக்குளத்தை சுற்றி நான்கு புறங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ரெங்கநாதரின் தெப்பக்காட்சியை கண்டு களித்தனர். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று தீர்த்தவாரி

இன்று(வியாழக்கிழமை) 9-ம் நாள் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு ரெங்கநாதர் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி 1 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளிய பின் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதியின் வழியாக இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

Source: dailythanthi201602180221041159_Srirangam-3-times-right-on-the-raft-had-ascended-to_SECVPF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*