. . .

லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Trichy News

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.

எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

எனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.