. . .

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா

Trichy News

trichy news

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பூதநாயகி அம்மன்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 98 கிராம மக்களுக்கு குடிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்திட கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 22–ந்தேதி தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்றது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது.

ஊஞ்சலாடு வைபவம்

முன்னதாக பூதநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்தார். அம்மன் செல்லும் போது ஆங்காங்கே ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன. இறுதியாக பள்ளிவாசல் அருகே சென்றதும் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் பூதநாயகி அம்மன் வைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊஞ்சலாடும் வைபவம் நடைபெற்றது. அதன்பின்னர் மீண்டும் பூதநாயகி அம்மனை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை கோவிலின் முன்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (8–ந்தேதி) இரவு விடையாற்றி மண்டகப்படியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

SOURCE : DailyThanthi