. . .

திருச்சி கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் போக்குவரத்து நெரிசலால் மாணவ, மாணவிகள் கடும் அவதி

trichy news

திருச்சி நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குபீவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

கொட்டி தீர்த்த கனமழை

திருச்சியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் மாலையில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன்பின் இரவில் மழை தூறியபடி இருந்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலையில் ஓடியது. மேலப்புதூர் சுரங்கபாதை பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. அரியமங்கலம் பால்பண்ணை அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பெய்த மழையால் திருச்சியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல் மணப்பாறையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இதுமட்டுமின்றி மாலை நேரங்களில் திடீர், திடீரென கனமழையும் கொட்டித் தீர்க்கின்றது. மணப்பாறையில் மட்டுமல்லாது மணப்பாறையை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் அதிக அளவில் இருந்த வறட்சி மாறி தற்போது குளுமையை காண முடிகிறது. நிலத்தடி நீர்மட்டமும் சற்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மணப்பாறையில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை திடீரென கனமழையாக கொட்டித்தீர்த்தது.

மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரவுண்டானா பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரை சாலைகளில் முழுவதுமாக மழைநீர் ஓடியது. இதனால் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரம் என்பதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் முடிந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்பும் நேரம் என்பதாலும் ரோடுகளில் நடந்தோ, இரு சக்கர வாகனங்களிலோ செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த கனமழை நின்றதை அடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் மழைநீர் வடியத்தொடங்கியது.

SOURCE : Dailythandi