. . .

குறுவை நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருச்சி:

திருச்சியில், குறுவை நெல் அறுவடை சீஸன் துவங்கியுள்ளதால், மாவட்டத்தில், துறையூர், லால்குடி தாலுகாக்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நேற்று திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில், 2,00க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில், லால்குடியை அடுத்த டி.கல்விக்குடி, கே.வி. பேட்டை, ஆலங்குடி, மகாஜனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்ட முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, லால்குடி தாலுகாவில், அபிஷேகபுரம், அன்பில், அரியூர், கல்விக்குடி, செம்பரை, திண்ணியம், நகர், பூவாளூர் ஆகிய இடங்களிலும், துறையூர் தாலுகாவில், டி.மேட்டூர், ஆலந்துடையான்பட்டி ஆகிய இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நேற்று திறக்கப்பட்டுள்ளன. ‘இந்த கொள்முதல் நிலையங்களில், சன்ன ரகம் ஒரு குவிண்டாலுக்கு, 1,520 ரூபாயும், பொது ரகம் ஒரு குவிண்டாலுக்கு, 1,460 ரூபாயும் வழங்கப்படும்’ என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

SOURCE : Dinakaran