கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி வரை 2வது ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

மணப்பாறை, மார்ச் 14:   வையம்பட்டி அருகேயுள்ள கல்பட்டிசத்திரத்திலிருந்து தாமரைப்பாடி வரை உள்ள 2வது  ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில் பாதை அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று திருச்சி மாவட்டம் கல்பட்டி சத்திரம் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பாடி வரை உள்ள 23 கி.மீ. தூர ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதற்கென ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் டிவிஷனல் ரயில்வே மேலாளர் மீனுத்ரேயா உள்பட 20க்கும் மேற்பட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று காலை முதல் பாலகட்டைகள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களின் உறுதித்தன்மையை 7 டிராலிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். மாலையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் தாமதமாக இரவு 7.30 மணிக்கு ரயில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி கல்பட்டிசத்திரத்திலிருந்து ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அதிகாரிகள் அனைவரும் அந்த ரயிலில் பயணித்தனர். மணிக்கு 80லிருந்து 120 கி.மீ. வேகம் வரை இயக்கப்பட்ட ரயில் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக அய்யலூரில்  நிறுத்தப்பட்டது. இதனால் சோதனை ஓட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*