அணுமின்னாலை நீராவி ஆக்கிகள் தயாரிக்க பெல்லுக்கு ரூ.736 கோடி ஆர்டர்

திருச்சி, மார்ச் 14: கடும் பன்னாட்டு போட்டி ஏலத்திற்கிடையே ரூ.736 கோடி மதிப்பில் இந்திய அணுமின் கழகத்திற்காக (என்பிசிஐஎல்) அணு மின்னாலை நீராவி ஆக்கிகளைத் தயாரித்து வழங்கும் குறிப்பிடத்தக்க ஆணையை பெல் நிறுவனம் வென்றுள்ளது. அரியானா மாநிலம் பதேபாத் மாவட்டத்தில் அமையவுள்ள 700 மெவா திறன் கோரக்பூர் அணுமின் திட்டத்தின் அழுத்தமளித்த கனநீர் உலைகளில் இந்த நீராவி ஆக்கிகள் பயன்படுத்தப்படும். இந்த நீராவி ஆக்கிகள் பெல்லின் திருச்சி பிரிவில் தயாரிக்கப்படும். என்பிசிஐஎல் உடன் இணைந்து அணு மின்னாலை நீராவி ஆக்கிகளை வடி வமைத்து மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் பி ஹெச் இ எல் நிறுவனம், இது வரை 38 நீராவி ஆக்கிகளை நாட்டின் பல்வேறு அணுமின்னாலைகளுக்கு வழங்கியுள்ளது. தற்பொழுது நாட்டில் நிறுவப்பட்டுள்ள மொத்த அணுமின் திறனில் கிட்டத்தட்ட பாதி அளவு பெல் தயாரித்து வழங்கிய கலன்களின் பங்களிப்பாகும். அழுத்தமளித்த கனநீர் உலைகள், அதிவேக பெருக்கி உலை மற்றும் மேம்பட்ட கன நீர் உலை என இந்தியாவின் அணுமின் துறையின் மூன்று நிலைகளிலும் தன்னை இணைத்துக்கொண்ட ஒரே இந்திய நிறுவனம் பெல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் அணுமின் திட்டங்கள் துவக்கப்பட்டது முதலே அதன் மேம்பாட்டுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெல் பங்களித்து வருகிறது. அணு மின்னாலை உபகரணங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவைப்படும் உலகத்தரம் வாய்ந்த தரம் மற்றும் குறியீடுகளுக்கான தனிப்பட்ட கட்டமைப்புகளும், திறன் வாய்ந்த மனிதவளமும் பெல் வசமுள்ளன. அணுமின் திட்டங்களின் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை உபகரண ங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் தனக்குள்ள திறனை பெல் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*